

திண்டுக்கல்,
10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெல்லை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த திருச்சி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஜெயராமன் சுரேஷ் குமார் அதிகபட்சமாக 58 ரன்கள் குவித்தார். நெல்லை தரப்பில் சச்சின் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய நெல்லை 18 ஓவரில் 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் முகிலேஷ் அதிகபட்சமாக 63 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் நெல்லை ராயல் கிங்சை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய திருச்சி வீரர் அதிசயராஜ் டேவிட்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.