முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்

பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இடையே முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
image courtesy: ICC
image courtesy: ICC
Published on

கராச்சி,

சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் முதல் அணியாக நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.

இதனையடுத்து கராச்சியில் நேற்று நடந்த கடைசி லீக்கில் பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 87 ரன்களும், மேத்யூ பிரெட்ஸ்கி 83 ரன்களும் கேப்டன் பவுமா 82 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 353 ரன் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கேப்டன் ரிஸ்வான் - ஆஹா சல்மான் இருவரும் சிறப்பாக விளையாடி சதமடித்து அணியை வெற்றி பெற வைத்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் 49 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 355 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. கேப்டன் முகமது ரிஸ்வான் 122 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். சல்மான் ஆஹா 134 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரு லீக்கிலும் தோற்ற தென் ஆப்பிரிக்கா வெளியேறியது. நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com