

புதுடெல்லி,
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய டி20 அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் கிரிக்கெட் அரங்கம் அதிரப்போவது உறுதியாக உள்ளது. வைபவ் சூர்யவன்ஷியின் வரவு இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் இந்தத் தொடரில் விளையாடினால், இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார்.
நடைபெற்ற 2026 ஐபிஎல் தொடரில் தனது அதிரடியான பவர்-ஹிட்டிங்கால் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து ஆரஞ்சு தொப்பியை வென்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, வரவிருக்கும் இரு நாடுகளின் (அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து) சுற்றுப்பயணங்களுக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசி செயலாளர் தேவாஜித் சாய்கியா தெரிவித்தார்.
2025 ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான அறிமுகத்தை தொடர்ந்து, சமீபத்தில் முடிவடைந்த 2026 ஐபிஎல் தொடரில் சூர்யவன்ஷி ஆரஞ்சு தொப்பியை வென்றார். அவர் 16 இன்னிங்ஸ்களில், ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்களுடன், நம்பமுடியாத அளவில் 237.30 ஸ்டிரைக் ரேட் மற்றும் 48.50 சராசரியில் 776 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் ராயல்சின் இரண்டு பிளேஆப் போட்டிகளிலும் சூர்யவன்ஷி நூலிழையில் சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, ஐபிஎல் தொடரின் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெய்லின் சாதனையை சூர்யவன்ஷி முறியடித்தார்.
சூர்யவன்ஷி 50 ஓவர் கிரிக்கெட்டிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிகரமான பயணத்திற்கு அவரே உயிரோட்டமாக இருந்தார். இறுதிப் போட்டியில் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து பல சாதனைகளை முறியடித்தார்.