

மும்பை,
“நேரம் வரும்போது உலகையே அதிர வைப்பார்” என்று வைபவ் சூர்யவன்ஷியை ஷ்ரேயாஸ் அய்யர் புகழ்ந்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய டி20 அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முன்னணி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து சுவாரசியமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
வெறும் 15 வயதிலேயே இந்திய அணியில் இடம்பிடித்து கவனம் ஈர்த்து வரும் வைபவ் சூர்யவன்ஷியுடன் தான் பெரும்பாலும் கிரிக்கெட் தொடர்பான விஷயங்களை பேசுவதில்லை என்று ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
“நான் வைபவிடம் பெரும்பாலும் கிரிக்கெட் அல்லாத விஷயங்களைப் பற்றித்தான் பேசுவேன். ஏனென்றால் எல்லோரும் அவரிடம் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.
அவரது குடும்பம் மற்றும் வாழ்க்கை முறை குறித்து பேசும்போது அவர் மிகவும் உற்சாகமாகவும் இயல்பாகவும் இருக்கிறார். மைதானத்திற்கு வெளியே மிகவும் அமைதியான நபராக இருக்கும் வைபவ், கையில் பேட்டை எடுத்துக்கொண்டு களமிறங்கும்போது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் ஆபத்தான வீரராக மாறிவிடுகிறார்” என்றார்.
“தற்போது உலகக்கோப்பை வென்ற தொடக்க வீரர்கள் அணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்த இடத்தில் தொடர்ந்து விளையாடுவதற்கு அவர்களுக்கு தகுதி உள்ளது.
வைபவுக்கு சரியான நேரம் வரும்போது, அவர் இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.”
என்று ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.