

பெங்களூரு,
தனது அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்து வரும் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சச்சின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை வெறும் 8 ரன்களில் நழுவவிட்டுள்ளார்.
துலீப் டிரோபி தொடரின் அரையிறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம் - மத்திய மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன. பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மத்திய மண்டல அணி 266 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய கிழக்கு மண்டல அணிக்கு தொடக்க வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் வெறும் 42 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், 92 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்ஷ் துபேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதன் மூலம், துலீப் டிரோபி வரலாற்றில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.
சச்சின் தெண்டுல்கர் 1990-91 துலீப் டிரோபியில் 17 வயது 262 நாட்களில் சதமடித்து இந்த சாதனையை படைத்திருந்தார். வைபவ் தற்போது 15 வயது 157 நாட்களில் 92 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 8 ரன்கள் எடுத்திருந்தால், சச்சினின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்திருப்பார்.
இருப்பினும், இந்த இன்னிங்ஸ் மூலம் துலீப் டிரோபி வரலாற்றில் மிக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
இப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய வீரர்களும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இதனால் கிழக்கு மண்டல அணி 266 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து மத்திய மண்டல அணி தனது 2-வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.