

பெங்களூரு,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு முறை பட்டத்தை வென்ற மூன்றாவது அணியாக ஆர்சிபி மாறியது. இதற்கு முன்பு சென்னை மற்றும் மும்பை மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தன.
இந்நிலையில், மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது பற்றி வீடியோ ஒன்றை கோலி பகிர்ந்துள்ளார். அதில்,
"நம்பிக்கையுடன் இந்த சீசனை தொடங்கினோம். மீண்டும் சாம்பியனாக இந்த தொடரை நிறைவு செய்தோம். இந்த அணி எல்லா அழுத்தங்களிலும், கடினமான சூழல்களிலும், சந்தோஷங்களிலும் ஒன்றாக இருந்து ஆதரவளித்துள்ளது.
இது மிக ஸ்பெஷலாக உணர வைக்கிறது. ஏனெனில் இதுதான் என் வீடு" என்று பதிவிட்டார்.
இந்த சீசனில் 16 இன்னிங்ஸ்களில் 675 ரன்கள் குவித்த கோலி, 56.25 சராசரி மற்றும் 165.84 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்தார். அவரது கணக்கில் ஒரு சதமும், ஐந்து அரைசதங்களும் இடம்பெற்றுள்ளன. அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் எடுத்திருந்தார்.
ஐபிஎல் தொடங்கிய நாள் முதல் ஆர்சிபி அணியுடன் பயணித்து வரும் விராட் கோலி, இன்னும் அந்த அணியின் மிகப்பெரிய அடையாளமாகவே திகழ்கிறார். “இதுதான் என் வீடு” என்ற அவரது ஒரு வரி, ஆர்சிபி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், கோலி-ஆர்சிபி உறவு எவ்வளவு ஆழமானது என்பதையும் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.