நான் சிறந்த பேட்ஸ்மேனாக மாற விராட் கோலிதான் காரணம் - ஜேக்கப் பெத்தேல்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜேக்கப் பெத்தேல் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

பர்மிங்காம்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 400 ரன்கள் குவித்து அசத்தியது. இங்கிலாந்து தரப்பில் ஜேக்கப் பெத்தேல் (82 ரன்கள்), பென் டக்கெட் (60 ரன்கள்), ஹாரி புரூக் (58 ரன்கள்) மற்றும் ஜோ ரூட் (57 ரன்கள்) ஆகிய 4 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 401 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவாக விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட் ஆனது. வெறும் 26.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி இங்கிலாந்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஜேக்கப் பெத்தேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் முன்பு இருந்ததை விட சிறந்த பேட்ஸ்மேனாக மாற விராட் கோலியின் ஆலோசனை உதவியதாக ஜேக்கப் பெத்தேல் தெரிவித்துள்ளார். இருவரும் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஒன்றாக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் வலுவான நிலையில் இருந்ததால் இன்று நான் பேட்டிங் செய்ய வந்தபோது எளிதாக இருந்தது. நிறைய டாட் பால்களை எதிர்கொள்வது ஒரு பேட்ஸ்மேனின் மனதிற்கு நல்லதல்ல. ஆரம்பத்திலேயே சில பவுண்டரிகள் அடிப்பது சரியானது.

ஐ.பி.எல். தொடரில் விளையாடிய அனுபவம் பயனைக் கொடுத்தது. ஐ.பி.எல். தொடரில் விளையாட செல்வதற்கு முன்பிருந்ததை விட தற்போது நான் முன்னேறிய பேட்ஸ்மேனாக இருக்கிறேன். அதற்கு விராட் கோலிதான் காரணம். அவர் தன்னுடைய அனுபவங்களையும் பேட்டிங் நுணுக்கங்களையும் பகிர்ந்தார்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com