

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி ஆக் லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு நடக்கிறது. ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து பல சாதனைகள் படைத்து முத்திரை பதிக்கும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி நியூசிலாந்து தொடரிலும் சில சாதனைகள் படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டும் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்தவராக இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் (8,720 ரன்) திகழ்கிறார். அவரது சாதனையை தகர்க்க கோலிக்கு இன்னும் 54 ரன்களே தேவைப்படுகிறது. அனேகமாக இந்த தொடரில் அச்சாதனையை காலி செய்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனை பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் உள்ளார். அவர் நியூசிலாந்துக்கு எதிராக 1,971 ரன் (51 ஆட்டம்) எடுத்துள்ளார். அவரை முந்துவதற்கு கோலிக்கு இன்னும் 75 ரன்களே தேவை. கோலி நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 36 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 7 சதம். 10 அரைசதம் உள்பட 1,897 ரன்கள் சேர்த்துள்ளார்.
3-வது வரிசையில் விளையாடும் கோலி 12 ரன் எடுத்தால், பேட்டிங்கில் 3-வது வரிசையில் களமிறங்கி 13ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற அரிய சாதைைனய படைப்பார்.
மேலும் 'செனா' நாடுகளில் (தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா இணைந்து) ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியும், தெண்டுல்கரும் 133 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இன்னும் ஒரு அரைசதம் அடித்தால் இந்த வகையிலும் அவர் தெண்டுல்கரை ஓரங்கட்டுவார்.