

ராய்ப்பூர்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற 57-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொண்டது.
மழை காரணமாக இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் போட்டி தொடங்கியநிலையில், டாஸ் வென்ற பெங்களுரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. கொல்கத்தா அணியின் சார்பில் கேப்ரன் ரகானே மற்றும் பின் ஆலன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பின் ஆலன் 18 (8) ரன்களும், ரகானே 19 (13) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக ரகுவன்ஷியுடன், கிரீன் ஜோடி சேர்ந்தார். விரைவாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் கிரீன் 32 (24) ரன்களில் போல்ட் ஆனார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரகுவன்ஷி 32 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அவருடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தநிலையில், அவர்கள் இருவரும் காட்டிய அதிரடியால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. இந்த நிலையில் போட்டியின் கடைசி ஓவர் கடைசி பந்தில் ரகுவன்ஷி 71 (46) ரன்கள் எடுத்திருந்தநிலையில் ரன் அவுட் ஆனார்.
இறுதியில் ரிங்கு சிங் 49 (29) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், சலாம் தார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் சார்பில் ஜேக்கப் பெத்தேல் மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஜேக்கப் பெத்தேல் 15 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக விராட் கோலியுடன் படிக்கல் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் விராட் கோலி 32 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த படிக்கல் 39 (27) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் படிதார் 11 ரன்களும், டிம் டேவிட் 2 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டி வந்த விராட் கோலி 58 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
இறுதியில் விராட் கோலி 105 (60) ரன்களும், ஜிதேஷ் சர்மா 8 (5) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளும், சுனில் நரைன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பெங்களூரு அணி பிரகாசப்படுத்தி உள்ளது.