நேபாள அணியுடன் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்

image courtesy: @CricketNep / @windiescricket
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.
கயானா,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியானது நேபாள அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம் இவ்விரு அணிகளும் வரலாற்றில் முதல் முறையாக இருதரப்பு தொடரில் விளையாடவுள்ளன. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடர் செப்டம்பர் 27-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகளும் இந்த டி20 தொடரில் விளையாடவுள்ளன. டி20 உலகக்கோப்பை தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி நேரடியாக தகுதிபெற்றுள்ள நிலையில், நேபாள அணியானது தகுதிச்சுற்றின் அடிப்படையில் தகுதிபெரும் வாய்ப்பில் உள்ளது.
டி20 அட்டவணை விவரம்:
முதல் டி20 போட்டி - செப்டம்பர் 27 - ஷார்ஜா
2வது டி20 போட்டி - செப்டம்பர் 28 - ஷார்ஜா
3வது டி20 போட்டி - செப்டம்பர் 30 - ஷார்ஜா






