பெண்கள் டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா

இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெண்கள் டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா
Published on

கார்டிப்,

10-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வருகிற 12-ந் தேதி முதல் ஜூலை 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தயாராவதற்காக அணிகள் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று வருகின்றன.

அந்த வகையில், கார்டிப்பில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்ததால், ஸ்மிருதி மந்தனா அணியை வழிநடத்தினார்.

மந்தனா - ஷபாலி அதிரடி தொடக்கம்

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

5.2 ஓவர்களில் இந்திய அணி 59 ரன்கள் எடுத்திருந்தபோது, 23 பந்துகளில் 39 ரன்கள் (8 பவுண்டரிகள்) எடுத்த மந்தனா கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா 29 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

பார்தி புல்மாலியின் அரைசதம்

அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 7 ரன்களில் ஏமாற்றம் அளித்தார். யாஸ்திகா பாட்டியா 36 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் ‘ரிட்டயர் அவுட்’ முறையில் வெளியேறினார்.

ரிச்சா கோஷ் (0), ராதா யாதவ் (1), ஸ்ரேயங்கா பட்டீல் (2) ஆகியோர் அபி பிளெட்சரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். எனினும், மறுமுனையில் உறுதியாக விளையாடிய பார்தி புல்மாலி அரைசதம் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. பார்தி புல்மாலி 56 ரன்களுடனும், ஸ்ரீ சரணி 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சுழற்பந்து வீச்சில் இந்தியா ஆதிக்கம்

180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். அந்த அணியில் டியோந்திர டோட்டின் மட்டும் 49 ரன்கள் எடுத்து போராடினார். மற்ற வீராங்கனைகள் பெரிய அளவில் பங்களிக்க தவறினர். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.

26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இதன் மூலம் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடருக்கு முன் நம்பிக்கை அளிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியின் வெற்றியில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். ஸ்ரேயங்கா பட்டீல் 4 விக்கெட்டுகளையும், ராதா யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அடுத்ததாக இங்கிலாந்துடன் மோதல்

இந்திய பெண்கள் அணி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் நாளை இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. உலகக் கோப்பை தொடருக்கு முன் நடைபெறும் இந்த போட்டி இந்திய அணியின் தயார்நிலையை மேலும் சோதிக்கும் முக்கியமான ஆட்டமாக அமையும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com