

ஆக்லாந்து,
விராட் கோலியை எதிர்கொள்ள ஆவலாக இருப்பதாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டபி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது. அந்த அணியில் விராட் கோலியுடன் இணைந்து விளையாடிய ஜேக்கப் டபி, தற்போது அவரை எதிர்த்து சர்வதேசப் போட்டியில் விளையாட உள்ளார்.
இதுகுறித்து பேசிய டபி, ’இந்தியாவில் விராட் கோலி மிகப்பெரிய நட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறார். ஆனால் அவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தும், அவர் மிகவும் எளிமையானவராகவும், ஆர்சிபி அணியில் இருந்த வெளிநாட்டு வீரர்களுடன் நட்புடனும் பழகினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. தற்போது அவரை எதிர்த்து விளையாடுவது சிறப்பான அனுபவமாக இருக்கும்’ என்றார்.
ஆர்சிபி அணியின் பயிற்சியின்போது கோலிக்கு பலமுறை பந்துவீசியதாக டபி தெரிவித்துள்ளார்.
“ஆர்சிபி வலைப்பயிற்சியில் கோலி எப்போதும் முதலில் பேட்டிங் செய்ய வருவார். நான் முதல் பந்துவீச்சாளராக இருப்பேன். இதனால் அவருக்கு நிறைய பந்துகளை வீசியுள்ளேன். அதனால் என்னை எதிர்கொள்ள அவர் தயாராக இருப்பார்” என்றார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 4-ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து நவம்பர் 7, 10, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெற உள்ளன.