

வான்கூவர்,
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'ஜி' பிரிவு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, நியூசிலாந்தை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது.
இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு வான்கூவரில் நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆட்டத்தின் கட்டுப்பாட்டை தனது வசம் வைத்திருந்தது.
அதன் பலனாக, 28-வது நிமிடத்தில் லியாண்ட்ரோ ட்ரோசார்ட் கோல் அடித்து பெல்ஜியத்தை 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்படுத்தினார். அதன்பிறகு நியூசிலாந்து சமநிலை கோலுக்காக போராடிய போதிலும், முதல் பாதி முடிவில் பெல்ஜியம் 1-0 என்ற முன்னிலையுடன் இருந்தது.
2-வது பாதி தொடங்கியதும் பெல்ஜியம் தனது தாக்குதல் ஆட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. 50-வது நிமிடத்தில் மீண்டும் லியாண்ட்ரோ ட்ரோசார்ட் தனது 2-வது கோலை பதிவு செய்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார். அதனைத் தொடர்ந்து 66-வது நிமிடத்தில் கெவின் டி ப்ரூய்ன் கோல் அடித்து வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தார்.
தொடர்ந்து போராடிய நியூசிலாந்து அணிக்கு 84-வது நிமிடத்தில் எலிஜா ஜஸ்ட் ஆறுதல் கோலை பதிவு செய்தார்.
ஆனால், அதற்கு இரண்டு நிமிடங்களிலேயே ரோமெலு லுக்காகு கோல் அடித்து பெல்ஜியத்தின் முன்னிலையை மேலும் அதிகரித்தார். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் அலெக்சிஸ் சேலேமேக்கர்ஸ் மேலும் ஒரு கோல் அடித்து கோல் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தினார்.
இறுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 5-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இந்த தோல்வியின் மூலம் நியூசிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. மறுபுறம், பெல்ஜியம் அணி இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்று நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.