

முனிச்,
ஜெர்மனியின் முன்னணி கால்பந்து கிளப்பான பேயர்ன் முனிச் அணியின் நட்சத்திர வீரரும், இங்கிலாந்து அணியின் கேப்டனுமான ஹாரி கேனுக்கு இடது கணுக்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற பன்டெஸ்லிகா போட்டியில் எப்.சி கொலோன் அணிக்கு எதிரான் ஆட்டத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இப்போட்டியின் 20வது நிமிடத்தில் மைக்கேல் ஒலிஸ் அனுப்பிய பந்தை நோக்கி சென்றபோது, கொலோன் வீரர் ஜோயல் ஷ்மிட் உடன் ஏற்பட்ட மோதலில் கேனின் இடது கணுக்காலில் அடிபட்டது.
வலியால் அவதிப்பட்ட கேன் மைதானத்திலிருந்து வெளியேறினார். பரிசோதனையில் அவரது இடது கணுக்காலில் உள்ள சிண்டெஸ்மோசிஸ் தசைநார் கிழிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேயர்ன் முனிச் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், கொலோன் அணிக்கு எதிரான போட்டியின்போது ஏற்பட்ட இடது கணுக்கால் தசைநார் கிழிவை தொடர்ந்து ஹாரி கேனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேன் தற்போது மறுவாழ்வு சிகிச்சையை தொடங்க உள்ளதாகவும் கிளப் குறிப்பிட்டுள்ளது.
காயத்தின் காரணமாக அவர் அடுத்த சில மாதங்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மீண்டும் களமிறங்குவதற்கான துல்லியமான தேதியை கிளப் இன்னும் அறிவிக்கவில்லை.
காயம் காரணமாக ஏமாற்றமடைந்தாலும், மனம் தளராமல் மீண்டு வருவேன் என்று ஹாரி கேன் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதில், வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம் என்றும், இந்த காயம் ஏமாற்றமளித்தாலும் மன உறுதியையும் திறமையையும் மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக இதை பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், 2027ஆம் ஆண்டில் புத்துணர்ச்சியுடன் மீண்டும் களமிறங்கி, விளையாடத் தயாராக இருப்பேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அணியின் முக்கியமான கோல் அடிக்கும் வீரரான ஹாரி கேன் சில மாதங்கள் விளையாட முடியாத நிலை பேயர்ன் முனிச் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கும் அவரது காயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், மறுவாழ்வு சிகிச்சைக்குப் பிறகு ஹாரி கேன் எப்போது மீண்டும் முழு உடற்தகுதியுடன் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.