நட்புறவு கால்பந்து போட்டி - ரஷியாவிடம் போராடி வீழ்ந்த இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் அணி, முதல் பாதியில் சிறப்பான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கால்பந்து
Published on: 

கொல்கத்தா,

இந்தியா - ரஷியா மகளிர் கால்பந்து அணிகளுக்கு இடையிலான சர்வதேச நட்பு ரீதியிலான போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 0-4 என்ற கோல் கணக்கில் ரஷியாவிடம் தோல்வியடைந்தது.

முதல் பாதியில் போராடிய இந்திய அணி!

இந்திய மகளிர் அணி, முதல் பாதியில் சிறப்பான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும், ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் ரஷிய வீராங்கனை இயானா ஷெய்னா கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

இதனால் முதல் பாதியின் முடிவில் ரஷிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

அடுத்தடுத்து கோல்கள் அடித்த ரஷியா!

இரண்டாவது பாதியில் ரஷிய அணியின் தாக்குதல் ஆட்டம் தீவிரமடைந்தது. மாற்று வீராங்கனையாகக் களமிறங்கிய கிரா பெதுகோவா, 60 மற்றும் 65-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அசத்தினார்.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ரஷிய அணிக்காக, 81-வது நிமிடத்தில் இயானா ஸ்விஸ்டுனோவா 4-வது கோலை அடித்தார். இதன் மூலம் ரஷிய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தரவரிசை

சர்வதேச கால்பந்து தரவரிசையில் 69-வது இடத்தில் உள்ள இந்திய மகளிர் அணி, 27-வது இடத்தில் உள்ள ரஷிய அணியை எதிர்கொண்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் பாதியில் இந்திய அணி சிறப்பாகத் தற்காத்து விளையாடியபோதிலும், இரண்டாவது பாதியில் ரஷிய அணியின் தொடர் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது.

இரு அணிகளுக்கும் இடையே மேலும் ஒரு சர்வதேச நட்புரீதியிலான போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதில் இந்திய அணி வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com