

நியூஜெர்சி,
உலகமே உற்றுநோக்கும் 23-வது உலக கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.30 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடக்கிறது. மகுடத்துக்கான யுத்தத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவும், முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் கோதாவில் குதிக்கின்றன.
இதையொட்டி இரு அணி வீரர்களும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகிறார்கள். ரசிகர்களும் கொண்டாட்டத்தை காண பேராவலுடன் காத்திருப்பதால் கால்பந்து களம் களைகட்டுகிறது. இன்னொரு பக்கம் அது தொடர்பான சுவாரசியங்களுக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லை.
இதனிடையே தொடையில் ஏற்பட்ட வலியால் ஸ்பெயின் நட்சத்திர வீரர் லமின் யமால் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை.
இந்நிலையில் இதுதொடர்பாக ஸ்பெயின் பயிற்சியாளர் லூயிசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதில் அளித்த அவர், “அர்ஜென்டினாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் லமின் யமால் விளையாடுவார். நாங்கள் அவருக்கு நேற்று ஓய்வு அளித்தோம். இன்று அவர் தனது சக வீரர்களுடன் வழக்கம்போலப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்” தெரிவித்துள்ளார்.
39 வயதான மெஸ்ஸியும், 19 வயதான லமின் யமாலும் ஒரே போட்டியில் களமிறங்குவது, ஒருபுறம் மெஸ்ஸியின் நீண்டகால சிறப்பான பயணத்தையும், மறுபுறம் லமின் யமாலின் அபாரமான திறமையையும் வெளிப்படுத்துகிறது
ஒருமுறை மெஸ்ஸியிடம் இளம் தலைமுறை கால்பந்தாட்ட வீரர்களில் சிறந்த ஒருவரின் பெயரை கூறுமாறு கேட்கப்பட்டபோது அவர் கூறியது யமாலின் பெயரைத் தான். அதேபோல், வரலாற்றில் சிறந்த கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிதான் என லமின் யமால் கூறுகிறார்.
முன்னதாக அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி, ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கிளப்புக்காக 15 ஆண்டுக்கு மேலாக விளையாடி இருக்கிறார். அந்த சமயத்தில் அதாவது 2007-ம் ஆண்டு ஐ.நா.வின் யுனிசெப் மற்றும் உள்ளூர் பத்திரிகை இணைந்து தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டும் காலண்டருக்காக குழந்தையை கொஞ்சுவது, குளிப்பாட்டுவது போன்ற புகைப்படங்கள் எடுக்கப்பட்டது.
பார்சிலோனா வீரர்களின் ஓய்வறையில் நடந்த இந்த போட்டோ ஷூட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மெஸ்சி, ஒரு சிறிய பிளாஸ்டிக் தொட்டியில் 6 மாத குழந்தையை குளிப்பாட்டும் காட்சியை புகைப்பட கலைஞர் ஜோவான் மான் போர்ட் 'கிளிக்' செய்தார். அந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.
இதில் என்ன ஆச்சரியம் என கேட்கிறீர்களா? அந்த குழந்தை வேறு யாருமில்லை. இப்போது ஸ்பெயின் கால்பந்து அணியின் இளம் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள லமின் யமால் தான்.
உலகக் கோப்பை கால்பந்து இறுதி யுத்தத்தில் அர்ஜென்டினாவும், ஸ்பெயினும் நாளை மறுதினம் கோதாவில் குதிக்கின்றன. அதில் மெஸ்சியை, லமின் யமால் முதல் முறையாக களத்தில் சந்திக்கப் போகிறார். 19 ஆண்டுக்கு முன்பு மெஸ்சியின் கையில் குழந்தையாக தவழ்ந்த லமின் யமால் இப்போது அவரை எதிர்த்து விளையாட இருப்பது சுவாரசியமான ஒன்றாகும்.
* நடப்பு ஐரோப்பிய சாம்பியன்-கோபா அமெரிக்கா சாம்பியன் அணிகள் உலகக் கோப்பை இறுதி சுற்றில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
* 1992-ம் ஆண்டு தரவரிசை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு உலகக் கோப்பை தொடரில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகள் இறுதிப்போட்டியில் மல்லுக்கட்டுவதும் இதுவே முதல் தடவையாகும்.
* அர்ஜென்டினா அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருப்பதன் மூலம் அதிக முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதில் 2-வது இடத்தில் உள்ள பிரேசிலை (7 தடவை) சமன் செய்தது. இந்த வகையில் ஜெர்மனி அணி (8 முறை) முதலிடத்தில் உள்ளது.
* இங்கிலாந்துக்கு எதிராக 2 கோல் அடித்ததன் மூலம் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 13 ஆட்டங்களில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கோல் அடித்த முதல் அணி என்ற பெருமையை நீட்டித்துள்ளது. அதற்கு அடித்தபடியாக உருகுவே அணி தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் (1930-1954) இதேபோல் கோலடித்து இருக்கிறது.