தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் - 10வது முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியா

பாகிஸ்தான் வீரர் ஜுனைத் ஷா, பிரிசன் பெர்னாண்டஸை மிக கடுமையாக தடுத்ததற்காக அவருக்கு நேரடியாக 'ரெட் கார்டு' வழங்கப்பட்டது.
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் -  10வது முறை  சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியா
Published on: 

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து கொண்டது.

முதல் பாதி ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், பாகிஸ்தான் வீரர் ஆலம் கிர் காசி கோல் அடித்து தனது அணிய முன்னிலைக்கு கொண்டு சென்றார். ஆனால், இரண்டாவது பாதியில் இந்தியா இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

59-ஆவது நிமிடத்தில் பாகிஸ்தான் அணியின் வீரர் ஒருவர் வெளியேற்றப்பட்டதால், அந்த அணி 10 வீரர்களுடன் மட்டுமே விளையாடியது; இந்த சூழலை இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது.

பெனால்டி வாய்ப்புகள்:

இந்தியாவுக்காக சுஹைல் அகமது பட் (60-ஆவது நிமிடம்) மற்றும் சந்தீப் நந்தி (88-ஆவது நிமிடம்) ஆகியோர் கோல்களை அடித்தனர். முதல் பாதி ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், பாகிஸ்தான் வீரர் காசி தனது வலது காலால் பந்தை வளைத்து கோல் வலைக்குள் செலுத்தினார். இந்திய கோல்கீப்பரால் அதை தடுக்க முடியவில்லை.

ஜுனைத் ஷா இடது பக்கத்தில் இருந்து பந்தை உள்ளே அனுப்ப, அது ஒரு இந்திய வீரரின் மீது பட்டு திசைமாறி, பெனால்டி பகுதிக்குள் இருந்த காசியிடம் சென்றது. அவர் துல்லியமாக பந்தை வலைக்குள் தள்ளி கோல் அடித்தார். இந்த கோலுக்கு முன்னதாக, சுமார் 35-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி பகுதிக்குள் பல கோல் வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் அவற்றை இந்திய வீரர்களால் கோலாக மாற்ற முடியவில்லை.

பாகிஸ்தான் ஆதிக்கம்:

ஆட்டத்தின் முதல் 30 நிமிடங்களில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியது. அவர்கள் ஒன்பது முறை கோல் அடிக்க முயற்சித்தனர், அதில் இரண்டு முறை பந்து இலக்கை நோக்கி சென்றது. அதே சமயம், இந்தியா இரண்டு முறை மட்டுமே முயற்சித்தது, ஆனால் அவை எதுவும் இலக்கை அடையவில்லை.

பாகிஸ்தான் வீரர் ஜுனைத் ஷா, பிரிசன் பெர்னாண்டஸை மிக கடுமையாக தடுத்ததற்காக அவருக்கு நேரடியாக 'ரெட் கார்டு' வழங்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் அணி 10 வீரர்களுடன் விளையாடிய நிலையில், 60-ஆவது நிமிடத்தில் இந்தியா சமன் கோலை அடித்தது.

இந்தியா சாம்பியன்:

இந்த சாதகமான சூழலை பயன்படுத்தி கொண்ட இந்தியா, சுஹைல் அகமது பட் மூலம் கோல் அடித்தது. லுங்டிம் கைமின்தாங் அடித்த 'ஃப்ரீ-கிக்' பந்தை, மக்கார்டன் நிக்சன் லேசாக தொட்டு மாற்றி கொடுக்க, அதை பட் கோலாக மாற்றினார்.

இந்த சமன் கோல் மற்றும் ஜுனைத் ஷாவின் வெளியேற்றத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் சில மாற்றங்களை செய்தார்; 64-ஆவது நிமிடத்தில் காசி மற்றும் அப்துல்லா இக்பால் ஆகியோரை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றினார். இருப்பினும், 88-ஆவது நிமிடத்தில் நந்தி கோல் அடிக்க, இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதன் மூலம், இதுவரை இல்லாத அளவாக 10-ஆவது முறையாக இந்த பட்டத்தை வென்றுள்ள இந்தியா, தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

X