'விராட் கோலியின் வாழ்த்து என்னை வியப்பில் ஆழ்த்தியது' - ஹாரி கேன் நெகிழ்ச்சி

பலோன் டி'ஆர் விருதை வென்று ஹாரி கேன் சாதனை படைத்துள்ளார்.
விராட் கோலி, ஹாரி கேன்
Published on: 

முனிச்,

விராட் கோலியின் வாழ்த்து தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக ஹாரி கேன் தெரிவித்துள்ளார்.

பலோன் டி'ஆர்

இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான ஹாரி கேன், ஜெர்மனியின் பேயர்ன் முனிச் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், 2026-ம் ஆண்டுக்கான கால்பந்தின் உயரிய தனிநபர் விருதான பலோன் டி'ஆர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் பலோன் டி'ஆர் விருதை வென்ற ஐந்தாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அவரது வெற்றிக்கு கால்பந்து மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு துறைகளை சேர்ந்த நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

விராட் கோலியின் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலியும் ஹாரி கேனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதில், “ஹாரி நண்பா, இத்தனை ஆண்டுகளாக உயர்நிலை கால்பந்தில் விளையாடி வரும் உனது மன உறுதி, கடின உழைப்பு, நேர்மை ஆகியவற்றுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இந்த விருதுக்கு நீங்கள் முழுத் தகுதியானவர். உங்களுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

வியப்பில் ஆழ்த்திய வாழ்த்து

இந்த நிலையில், தனக்கு வந்த வாழ்த்து செய்திகளில் எது மிகவும் வியப்பை ஏற்படுத்தியது என்று ஹாரி கேனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “டேவிட் பெக்காம் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர். அவரிடமிருந்து வாழ்த்து வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. டாம் பிராடி, விராட் கோலி போன்ற நான் பெரிதும் மதிக்கும் விளையாட்டு வீரர்களிடமிருந்தும் வாழ்த்துகள் வந்தன. அதேபோல், எனது நெருங்கிய நண்பரான எட் ஷீரனிடமிருந்தும் வாழ்த்து கிடைத்தது. இவை அனைத்தும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் வியப்பையும் அளித்தன” என்று தெரிவித்தார்.

விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த நட்சத்திரங்களிடமிருந்து கிடைத்த இந்த வாழ்த்துகள், பலோன் டி'ஆர் விருது வென்ற மகிழ்ச்சியை மேலும் அதிகரித்துள்ளதாக ஹாரி கேன் கூறியுள்ளார்.

X