உலகக் கோப்பை: எகிப்துக்கு எதிரான வெற்றி: உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய மெஸ்சி - வீடியோ வைரல்

அர்ஜென்டினா அணி காலிறுதியில் சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
உலகக் கோப்பை: எகிப்துக்கு எதிரான வெற்றி: உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய மெஸ்சி - வீடியோ வைரல்
Published on

அட்லாண்டா,

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘சுற்று 16’ நாக்-அவுட் போட்டியில் எகிப்தை வீழ்த்தி அர்ஜென்டினா காலிறுதிக்கு முன்னேறியநிலையில், உணர்ச்சிவசப்பட்டு மெஸ்சி கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

காலிறுதி

பிபா உலகக் கோப்பை வரலாற்றின் மிகச்சிறந்த கம்பேக் ஆட்டங்களில் ஒன்றை அர்ஜென்டினா அணி பதிவு செய்துள்ளது.

நேற்று இரவு அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற ‘சுற்று 16’ (Round of 16) நாக்-அவுட் போட்டியில், ஆரம்பம் முதலே எகிப்து அதிரடி காட்டியது. 15-வது நிமிடத்தில் யாசர் இப்ராஹிம் முதல் கோலை அடித்து எகிப்தை முன்னிலை பெற செய்தார். தொடர்ந்து 67-வது நிமிடத்தில் முஸ்தபா ஜிகோ மேலும் ஒரு கோல் அடிக்க, அர்ஜெண்டினா 0-2 என்ற பின்னடைவை சந்தித்தது.

இருப்பினும் இறுதிக்கட்டத்தில் அர்ஜெண்டினா அபாரமாக விளையாடியது. 79-வது நிமிடத்தில் மெஸ்சியின் உதவியுடன் கிறிஸ்டியன் ரொமேரோ கோல் அடித்து கணக்கை தொடங்கினார். அதன் பின்னர் 84-வது நிமிடத்தில் மெஸ்சியே ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார்.

கூடுதல் நேரத்தின் 90+2-வது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் வெற்றிக்கான கோலை அடிக்க, அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா காலிறுதிக்கு முன்னேறியது.

ஆனந்த கண்ணீர்

இறுதி விசில் ஒலித்தவுடன், அர்ஜென்டினா வீரர்கள் வெற்றியை கொண்டாட மைதானத்திற்குள் ஓடிவந்தனர். அப்போது கேப்டன் மெஸ்சி தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஆனந்த கண்ணீர் விட்டார். இது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. மெஸ்சி கண்கலங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அர்ஜென்டினா அணி காலிறுதியில் சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com