

ஆர்லிங்டன்
பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து 7 முறை கோல் அடித்து மெஸ்சி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆர்லிங்டன் நகரில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில், ஜோர்டானுக்கு எதிரான லீக் ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி அதிரடியாக விளையாடினார்.
போட்டியின் தொடக்கத்தில் விளையாடாதபோதும், 60-வது நிமிடத்தில் களமிறக்கி விடப்பட்ட மெஸ்சி, 80-வது நிமிடத்தில் ப்ரீ-கிக்காக கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால், உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் தொடர்ந்து 7 முறை கோல் அடித்து சாதனை படைத்த வீரராகி உள்ளார்.
அவர், பிபா உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை மொத்தம் 19 கோல்களை அடித்துள்ளதுடன், போட்டி தொடரில், அதிக கோல்களை அடித்த அர்ஜெண்டினா வீரராகவும் சாதனை படைத்திருக்கிறார். இந்த போட்டி தொடரில் 6 கோல்களுடன், லீக் பிரிவில் முன்னணி வீரராகவும் அவர் உள்ளார். இந்த தொடரின் ஜெ பிரிவு லீக் ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி, ஜோர்டானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.