யு-18 ஆசியக் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனும், தொடரை நடத்தும் அணியுமான ஜப்பானை எதிர்கொள்ள உள்ளது.
யு-18 ஆசியக் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
Published on

ககாமிகஹாரா,

யு-18 ஆண்கள் ஆசியக் கோப்பை ஆக்கி 2026 தொடரின் பரபரப்பான அரையிறுதிப் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

ஒருகட்டத்தில் 2-3 என பின்தங்கியிருந்த இந்தியா, கடைசி கால்பகுதியில் அபாரமான கம்பேக் கொடுத்து வெற்றியை தன் வசப்படுத்தியது.

இந்தியாவுக்கு முன்னிலை கொடுத்த ஆஷிஷ்

போட்டியின் 12-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி ஸ்ட்ரோக் கிடைத்தது. அதை இந்திய வீரர் ஆஷிஷ் கோலாக மாற்றி 1-0 என்ற கணக்கில் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். முதல் கால்பகுதி முடிவில் இந்தியா அந்த முன்னிலையை தக்கவைத்துக் கொண்டது.

பதிலடி கொடுத்த பாகிஸ்தான்

இரண்டாவது கால்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 27-வது நிமிடத்தில் பாகிஸ்தான் 1-1 என சமநிலையை எட்டியது. இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் முடிவடைந்தது.

மூன்றாவது கால்பகுதியில் பரபரப்பு

35-வது நிமிடத்தில் ஷாருக் அலி அடித்த கோல் மூலம் இந்தியா மீண்டும் 2-1 என முன்னிலை பெற்றது.

இருப்பினும் 37-வது நிமிடத்தில் பாகிஸ்தானின் முஹம்மது பர்ஹான் அஸ்லம் கோல் அடித்து சமநிலையை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து 42-வது நிமிடத்தில் உசைர் அகமது குரேஷி பெனால்டி கார்னரை கோலாக மாற்ற, பாகிஸ்தான் 3-2 என போட்டியில் முன்னிலை பெற்றது.

கடைசி கால்பகுதியில் இந்தியாவின் அதிரடி

இறுதிப்போட்டியில் நுழைய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா கடைசி கால்பகுதியில் முழு தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 49-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை ஆஷிஷ் கோலாக மாற்றி 3-3 என சமநிலையை ஏற்படுத்தினார். 53-வது நிமிடத்தில் மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்திய ஆஷிஷ் தனது ஹாட்ரிக் கோலை பூர்த்தி செய்ததுடன், இந்தியாவை 4-3 என முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

4-வது கோலுடன் வெற்றியை உறுதி செய்த ஆஷிஷ்

ஆட்டம் முடிவடைய இன்னும் நான்கு நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், இந்தியாவுக்கு மற்றொரு பெனால்டி கார்னர் கிடைத்தது. 56-வது நிமிடத்தில் அதை மீண்டும் கோலாக மாற்றிய ஆஷிஷ், போட்டியில் தனது 4-வது கோலை பதிவு செய்தார். இதன் மூலம் இந்தியா 5-3 என முன்னிலை பெற்று வெற்றி பெற்றது.

ஜப்பானுடன் இறுதிப்போட்டி

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனும், தொடரை நடத்தும் அணியுமான ஜப்பானை எதிர்கொள்ள உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com