

டாம்பெரே,
சர்வதேச டாம்மர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு 4 தங்கம், 2 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களைக் குவித்துள்ளனர். இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
சர்வதேச டாம்மர் குத்துச்சண்டைப் போட்டி பின்லாந்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் மகளிருக்கான 70 கிலோ எடைப் பிரிவில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அருந்ததி சவுத்ரி, அயர்லாந்தின் எவ்லின் இவி இகாரோவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.
மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவில் ஆர்த்தி தாரியால், ஸ்காட்லாந்து வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். மகளிருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் அங்குஷிதா போரோ, இங்கிலாந்தின் எல்லா தாம்ப்ஸ்டோனை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
ஆடவருக்கான 55 கிலோ எடைப் பிரிவில் பவன் பார்த்வால் தங்கம் வென்றார்.
மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஜாஸ்மின் லம்போரியா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 60 கிலோ எடைப் பிரிவில் முகமது ஹுசாமுதீனும் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
ஆடவர் பிரிவில் விவேக் மீனா (65 கிலோ), ஹிதேஷ் (70 கிலோ), அக்ஷய் (80 கிலோ), பாபின் சவுகான் (90 கிலோ), சேத்தன் சவுத்ரி (90 கிலோவுக்கு மேல்) ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
மகளிர் பிரிவில் தனு (51 கிலோ), திஷா பாட்டீல் (60 கிலோ), இம்ரோஸ் கான் (75 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.