

* ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் அளித்த ஒரு பேட்டியில், இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் போட்டி எப்போதும் பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்ததாக இருக்கும். இப்போதே இந்த தொடரை எதிர்பார்க்க தொடங்கி விட்டார்கள். டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் திரும்பிய பிறகு ஆஸ்திரேலிய அணி வலுவடைந்து விட்டது. அதே சமயம் உலக அரங்கில் இ்ந்தியாவும் தற்போது மிகச்சிறந்த அணியாக விளங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. அதனால் இந்த தொடர் மக்கள் மனதில் நீண்ட காலம் நினைவில் இருக்கும் வகையில் அமையும். இந்திய கேப்டன் விராட் கோலி சவாலை விரும்பக்கூடியவர். அதனால் இந்த தொடரின் போது இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் ஆடும் என்று நம்புகிறேன் என்றார்.
* இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், இந்தியாவின் பிரதான முதல்தர போட்டியான ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களின் போட்டி கட்டணத்தை அதிகரிக்க பரிசீலிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐ.பி.எல். மீதான மோகம் அதிகமாகும் என்றார். கிரிக்கெட்டில் உடல் தகுதி மிகவும் முக்கியம். நீண்ட காலம் ஒதுங்கி இருக்கும் டோனி மீண்டும் இந்திய அணிக்கு எப்படி திரும்ப முடியும் என்றும் கவாஸ்கர் கேள்வி எழுப்பினார்.
* கொல்கத்தாவின் நீண்ட பாரம்பரிய கால்பந்து கிளப்பான மோகன் பகான், ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பங்கேற்று வரும் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியுடன் இணைகிறது. இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. எல்லாம் வெற்றிகரமாக அமைந்தால் அடுத்த ஐ.எஸ்.எல். சீசனில் ஒன்றிணைந்து களம் இறங்கும்.
* நியூசிலாந்தில் விளையாடும் இ்ந்திய ஏ அணியில் இடம் பிடித்திருந்த ஹர்திக் பாண்ட்யா உடல்தகுதியை எட்டாததால் அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
* 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு புவனேசுவரத்தில் நடந்த 57-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. அணி 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தி 5-வது வெற்றியை சுவைத்தது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் கொல்கத்தா-கேரளா அணிகள் மோதுகின்றன.