

சென்னை,
இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளனம் சார்பில், 3-வது எச்.சி.எல். (HCL) தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இத்தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன்களான அபய் சிங் - வேலவன் செந்தில்குமார் ஜோடி, ரவி தீட்சித் - விகாஸ் மெஹ்ரா இணையுடன் மோதியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய அபய் சிங் கூட்டணி 11-1, 11-6 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் இந்த ஜோடி, ராகுல் பைதா - சுரஜ்குமார் சந்த் இணையை எதிர்கொள்கிறது.
தொடர்ந்து நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவின் முதலாவது அரையிறுதியில், தமிழகத்தின் நட்சத்திர வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா - வேலவன் செந்தில்குமார் ஜோடி, ராகுல் பைதா - அனிகா துபே இணையை எதிர்கொண்டது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ்னா - வேலவன் கூட்டணி 11-6, 11-9 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அபய் சிங் - ராதிகா சீலன் ஜோடி, சுரஜ் குமார் சந்த் - நிரூபமா துபே ஜோடியை எதிர்கொண்டது. இதில் கடும் போராட்டத்திற்குப் பின் 12-10, 11-7 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற அபய் சிங் - ராதிகா சீலன் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.