

நகோயா,
ஆசிய விளையாட்டில் பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை வித்யா ராம்ராஜ் முறியடித்துள்ளார்.
20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் வித்யா ராம்ராஜ் 54.75 விநாடிகளில் இலக்கை கடந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் பி.டி. உஷாவின் சாதனையை வித்யா ராம்ராஜ் முறியடித்தார்.
இதற்கு முன்பு 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் 400 மீட்டர் தடை ஓட்ட இறுதிப்போட்டியில் பி.டி. உஷா 55.42 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்திருந்தார். இதுவே 42 ஆண்டுகளாக தேசிய சாதனையாக இருந்து வந்தது.
தற்போது வித்யா ராம்ராஜ் 54.75 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து பி.டி. உஷாவின் நீண்ட கால தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வித்யா ராம்ராஜ், பி.டி. உஷாவின் தேசிய சாதனையான 55.42 விநாடிகளை சமன் செய்திருந்தார். தற்போது அதைவிட வேகமாக ஓடி சாதனையை முறியடித்துள்ள வித்யா ராம்ராஜ், தனது பெயரில் புதிய தேசிய சாதனையை பதிவு செய்துள்ளார்.
மேலும், ஆண்களுக்கான 90 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில், தென் கொரிய வீரரை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் கபில் போகாரியா அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம், இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது.