

இஸ்லாமாபாத்,
23 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
14-வது தெற்காசிய விளையாட்டு போட்டி வரும் 2027-ம் ஆண்டு ஏப்ரல் 3 முதல் 11 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. 28 விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் 3 நகரங்களில் நடத்தப்படுகின்றன.
இஸ்லாமாபாத்: ஸ்குவாஷ், டென்னிஸ், தற்காப்புக் கலைகள் உள்ளிட்ட 15 விளையாட்டுகள்.
லாகூர்: கிரிக்கெட், ஹாக்கி, நீச்சல் உள்ளிட்ட 10 விளையாட்டுகள்.
பெஷாவர்: 3 விளையாட்டுகள்.
இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2008-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெற உள்ள தெற்காசிய விளையாட்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2008-ம் ஆண்டுக்குப் பிறகு கிரிக்கெட் தவிர, சில விளையாட்டுகளில் இந்திய அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று போட்டிகளில் பங்கேற்றன.
டென்னிஸ்: 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்திய டென்னிஸ் அணி 60 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சென்றது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற டேவிஸ் கப் உலக குரூப்-1 பிளே-ஆப் போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
பிரிட்ஜ்: 2023-ம் ஆண்டு மே மாதம் லாகூரில் நடைபெற்ற ஆசிய மற்றும் மத்திய கிழக்கு பிரிட்ஜ் கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் 30 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. இதில் ஓபன், மிக்ஸ்டு, பெண்கள் மற்றும் சீனியர் ஆகிய 4 பிரிவுகளிலும் இந்தியா தங்கப் பதக்கங்களை வென்றது.
தடகளம்: 2024-ம் ஆண்டு நவம்பரில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஆசிய கிராஸ் கன்ட்ரி சாம்பியன்ஷிப்பிலும் இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.
பாகிஸ்தான் 23 ஆண்டுகளுக்கு பிறகு தெற்காசிய விளையாட்டு போட்டிகளை நடத்துகிறது. இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் இந்த போட்டிகள் நடைபெற்றன.