2026-ன் டென்னிஸ் கிங் - சின்னரையும் அல்காரஸையும் ஓரங்கட்டி முதலிடம் பிடிக்கும் ஸ்வரேவ்

அல்காரஸ் வெளியேறியது டென்னிஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2026-ன் டென்னிஸ் கிங் - சின்னரையும் அல்காரஸையும் ஓரங்கட்டி முதலிடம் பிடிக்கும் ஸ்வரேவ்
Published on: 

ஷாங்காய்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

அல்காரஸுக்கு அதிர்ச்சி தோல்வி!

ஷாங்காய் மாஸ்டர்ஸ் தொடரின் 3-வது சுற்றில், தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள பெல்ஜிய வீரர் ஜிசோ பெர்க்ஸை எதிர்கொண்டார் அல்காரஸ்.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பெர்க்ஸ் 7-5, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான அல்காரஸ் வெளியேறியது டென்னிஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்வரெவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் காயம் காரணமாக இந்த சீசனில் தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் உள்ளார். இதற்கிடையே, அல்காரஸும் ஷாங்காய் தொடரில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இதனால், 2026-ம் ஆண்டின் இறுதியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல்நிலை வீரராக ஸ்வரெவ் ஆவது உறுதியாகியுள்ளது. இதற்கு முன்பு அவர் உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போரிஸ் பெக்கருக்குப் பிறகு

ஜெர்மனி டென்னிஸ் வரலாற்றில் போரிஸ் பெக்கருக்குப் பிறகு, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆண்டின் இறுதியில் முதலிடத்தை பிடிக்கும் முதல் வீரர் என்ற பெருமையை ஸ்வரெவ் பெற்றுள்ளார்.

மேலும், தனது 29 வயதில் முதல்முறையாக ஆண்டின் இறுதி உலகின் முதல்நிலை வீரர் என்ற பெருமையைப் பெறுவதன் மூலம், இந்தச சாதனையை எட்டும் அதிக வயதுடைய முதல் வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.

இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்!

2026-ம் ஆண்டு ஸ்வெரெவுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. பிரெஞ்சு ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் அரையிறுதி வரை முன்னேறிய அவர், விம்பிள்டன் இறுதிப்போட்டியிலும் விளையாடினார்.

இந்தச் சாதனைகளுடன் தற்போது ஆண்டின் இறுதி உலகத் தரவரிசையில் முதலிடத்தையும் உறுதி செய்துள்ள ஸ்வெரெவ், தனது டென்னிஸ் வாழ்க்கையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com