பாரிஸ் மாஸ்டர்ஸ்: போட்டி தொடங்குவதற்கு முன் மீண்டும் ஸ்பெயின் திரும்பிய நடால்- என்ன காரணம்?

பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்க பாரிஸ் வந்த நடால், போட்டி தொடங்குவதற்கு முன் மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

பாரிஸ்,

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்று பாரிஸில் நேற்று தொடங்கியது. இன்றும் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் சுற்று (ரவுண்டு ஆப் 62) போட்டிகள் தொடங்குகிறது. நவம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

பாரிஸ் மாஸ்டர்ஸில் பங்கேற்பதற்காக நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) கடந்த சில தினங்களுக்கு முன் பாரிஸ் சென்று அடைந்தார். அதை தொடர்ந்து இந்த தொடருக்கு தயாராகும் விதமாக நடால் பாரிஸில் பயிற்சி மேற்கொண்டார்.

முன்னணி வீரர் என்பதால் இந்த தொடரில் நேரடியாக ரவுண்டு ஆப் 32 சுற்றில் நடால் விளையாடுவார். இந்த போட்டியில் அவர் ராபர்டோ பாடிஸ்டா அல்லது டாமி பாலை (தகுதி சுற்றில் வெற்றி பெறுபவர்கள்) நவம்பர் 1 ஆம் தேதி எதிர்கொள்கிறார்.

இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களே உள்ள நிலையில் ரபேல் நடால் தனது நெருங்கிய நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தாயகமான ஸ்பெயின் நாட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த விழா முடிந்தவுடன் அவர் மீண்டும் பாரிஸ் திரும்ப உள்ளார்.

22 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ள நடால் அமெரிக்க ஓபனின் நான்காவது சுற்றில் பிரான்சிஸ் தியாஃபோவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எந்த ஒற்றையர் பிரிவு ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை.

விம்பிள்டன் தொடரில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தந்தையான பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் தொடராக பாரிஸ் மாஸ்டர்ஸ் அமைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடால் கலந்து கொள்ளும் ஒற்றையர் பிரிவு தொடர் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com