

லண்டன்,
24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் நோவக் ஜோகோவிச், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியுடன் இணைந்து டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஜோகோவிச், "எனக்கு விராட் கோலியுடன் கிரிக்கெட்டும், டென்னிஸும் விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நான் விரைவில் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளேன். அதுகுறித்து நாங்கள் இருவரும் தொடர்ந்து பேசி வருகிறோம்.
விராட் கோலி உலக அளவில் மிகப்பெரிய நட்சத்திரம் என்பது எனக்கு தெரியும். குறிப்பாக இந்தியாவில் அவருக்கு கிடைக்கும் அன்பும், வரவேற்பும் உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது.
இந்தியாவுக்கு வரும்போது, அந்த நாட்டை விராட் கோலி எனக்கு சுற்றிக்காட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் மீதும், இந்திய கிரிக்கெட் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது," என்றார்.
கிரிக்கெட் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்த ஜோகோவிச், "நான் வளர்ந்த செர்பியாவில் கிரிக்கெட் பெரிய அளவில் பிரபலமான விளையாட்டு அல்ல. ஆனால், எனது குழுவில் உள்ள பிரிட்டனை சேர்ந்த சிலருக்கு கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. அவர்களிடமிருந்து அந்த விளையாட்டை பற்றி நிறைய தெரிந்துகொண்டேன்," என்றும் கூறினார்.
விம்பிள்டன் தொடரில் இதுவரை 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், தனது 8-வது விம்பிள்டன் பட்டத்தை இலக்காக கொண்டு இன்று நடைபெறும் போட்டியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமை எதிர்கொள்ள உள்ளார்.