சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாகீர்கான் நியமனம்

முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் விருப்பத்தை ஏற்று ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாகீர்கான் நியமனம்
Published on

சென்னை:

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளராக நீண்ட காலமாக பணியாற்றி வந்த நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளெமிங், அந்த பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

17 ஆண்டுகள் பயணம்

கடந்த 2008-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்த ஸ்டீபன் பிளெமிங், 2009-ம் ஆண்டு முதல் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.

17 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பணியாற்றிய அவர், அணியின் பல்வேறு வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். 2026-ம் ஆண்டு சீசன் நிறைவடைந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார்.

பிளெமிங்கின் நீண்ட கால பங்களிப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நன்றி தெரிவித்ததுடன், அவரது சேவையையும் பாராட்டியுள்ளது.

ஜாகீர் கான் நியமனம்

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், கிரிக்கெட் தொடர்பான நிர்வாகப் பொறுப்புகளிலும் ஜாகீர் கான் பணியாற்றியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்தியர் ஒருவர் தலைமை பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்ற அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் விருப்பத்தை ஏற்று ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

புதிய தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான், எம்.எஸ். தோனியுடன் இணைந்து அணியின் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com