

சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே மருதிபட்டி கிராமத்தில் மருது அய்யனார் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி திருவிழா இந்த கோவிலில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் பங்குனி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை கிராமத்தின் மையப்பகுதியான புரவி பொட்டலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள மருது அய்யனார் கோவில் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இதைதொடர்ந்து பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்தனர். பின்னர் மருதிப் பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் முன்பு உள்ள பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் கோழி, ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். விழாவில் மருதிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மருதிபட்டி கிராமத்தினர் செய்திருந்தனர்.