

வாட்ஸ்அப்பில் ஒருவரின் இருப்பிடத்தைப் பகிர வேண்டுமானால், இதுவரை தனிப்பட்ட உரையாடல் வழியாகவோ அல்லது ஸ்டேட்டஸில் புகைப்படம், வீடியோவுடன் இருப்பிடக் குறியீட்டைச் சேர்த்தோ பகிர வேண்டியிருந்தது.
இந்த நடைமுறையை எளிமையாக்கும் வகையில், புகைப்படம் அல்லது வீடியோ இல்லாமலேயே நேரடியாக ஸ்டேட்டஸில் இருப்பிடத்தைப் பகிரும் புதிய வசதியை வாட்ஸ் அப் உருவாக்கி வருகிறது.
ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக உருவாக்கப்படும் இந்த வசதி, கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் வாட்ஸ் அப் பீட்டா பதிப்பு 2.26.45.8-ல் கண்டறியப்பட்டுள்ளது. இது பயன்பாட்டுக்கு வந்தால், வாட்ஸ்அப்பின் 'அப்டேட்ஸ்' பகுதியில் ஸ்டேட்டஸ் உருவாக்கும்போது தனியாக 'லொகேஷன்' என்ற தேர்வு இடம்பெறும். அதனைத் தேர்வு செய்தால், பயனரின் தற்போதைய இருப்பிடம் தானாகக் காட்டப்படும். அதைப் பகிர்வதற்கு முன்பு சரிபார்த்துக் கொள்ளவும் முடியும்.
துல்லியமான இருப்பிடத்தைப் பகிர விரும்பாதவர்கள், சாதனத்தின் அமைப்புகள் வழியாகத் தோராயமான இருப்பிடத்தைப் பகிரும் வாய்ப்பையும் பெறலாம். அதேபோல், தற்போதைய இடத்திற்கு பதிலாக, அதாவது லைவ் லொகேஷனுக்கு பதிலாக வேறொரு இடத்தையும் வரை படத்தில் தேர்வு செய்து பகிர முடியும். பகிரப்படும் இருப்பிடம் வழக்கமான ஸ்டிக்கராக இல்லாமல், வரைபட அட்டையாகத் தோன்றும். அதில் பச்சை நிறக் குறியீட்டுடன் இடத்தின் பெயர், முழு முகவரி ஆகிய விவரங்களும் இடம்பெறும்.
தற்போது இந்த வசதி உருவாக்கப் பணியில் மட்டுமே உள்ளது. பீட்டா சோதனையாளர்களுக்குக்கூட இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே, அனைத்து பயனர்களுக்கும் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.