

டி.என்.பாளையம்,
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொங்கர்பாளையம் மலைப்பகுதியில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 42 அடி ஆகும். நீர்பிடிப்பு பகுதிகளாக கம்பனூர், விளாங்கோம்பை, குன்றி ஆகிய மலைப்பகுதிகள் உள்ளன. அணையின் வலது மற்றும் இடது வாய்க்கால் மூலம் 2 ஆயிரத்து 498 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த 24-ந் தேதி மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்தது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 24-ந் தேதி நள்ளிரவு முதல் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி வரை பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 212 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அப்போது அணையின் நீர்மட்டம் 40.04 அடியாக இருந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்ததால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று காலை அதன் முழு கொள்ளளவான 42 அடியை எட்டியது. அணை நிரம்பியதை தொடர்ந்து அதில் இருந்து உபரிநீர் வெளியேறியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 91 கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது.
அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் அங்குள்ள ஓடையில் பாய்ந்து தானத்தூர், வினோபாநகர், கள்ளியங்காடு வழியாக பவானி ஆற்றை சென்றடைந்தது.
நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதாலும் அந்த பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையே கொங்கர்பாளையம் பகுதியில் மழை பெய்ய வேண்டி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தேவதைகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இந்த நிலையில் நேற்று குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அணைப்பகுதியில் கருப்பசாமிக்கு ஆடுகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.