இன்று வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்.. இதுவரை 108 வேட்புமனுக்கள் வாபஸ்..!

அனைத்து வேட்புமனுக்களையும் கடந்த 7-ந்தேதி அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர்.
இன்று வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்.. இதுவரை 108 வேட்புமனுக்கள் வாபஸ்..!
Published on

சென்னை,

தமிழகத்தில் வருகிற 23-ந் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ந்தேதி தொடங்கி கடந்த 6-ந்தேதி வரை நடைபெற்றது. 4 நாட்கள் விடுமுறையான நிலையில் 4 நாட்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 6-ந்தேதி வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளாகும்.

முதல் நாளான மார்ச் 30-ந்தேதி 573 வேட்புமனுக்களும், 2-ம் நாளான கடந்த 2-ந்தேதி 1,361 வேட்புமனுக்களும், 3-ம் நாளான 4-ந்தேதி 3,430 வேட்புமனுக்களும், கடைசி நாளான 6-ந்தேதி 7,599 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து வேட்புமனுக்களையும் கடந்த 7-ந்தேதி அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர்.

இந்த பரிசீலனைக்கு பிறகுதான் எத்தனை வேட்பு மனுக்கள் செல்லத்தக்கவை, எத்தனை வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்ற விவரம் தெரியவரும். அதன்படி, 7,599 வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு 5,081 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 2,480 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், 38 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

இன்று வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தவர் நேரில் வந்தோ அல்லது அவரின் அங்கீகாரம் பெற்ற முகவர் மூலமாகவோ வேட்புமனுவை திரும்பப் பெறலாம். இன்று காலை 11 மணியில் இருந்து 3 மணிக்குள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

அதன் பிறகு இறுதி பட்டியல் தயார் செய்து இன்று அறிவிக்கப்பட உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாக உள்ளநிலையில், இதுவரை 108 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில்தான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒட்டப்பட வேண்டிய வேட்பாளரின் வண்ணப் புகைப்படம் மற்றும் சின்னத்துடன் கூடிய தாள் (பேலட் பேப்பர்) அச்சிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com