கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீரான குடிநீர் வினியோகம் செய்ய அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரம் பகுதி கிராம மக்கள் நேற்று காலையில் ஊர்த்தலைவர் மிக்கேல் ஜெபமாலை, செயலாளர் தஸ்நேவிஸ் ஆகியோர் தலைமையில் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் குடிநீர் கோரி திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அந்தோணியார்புரம் பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்துக்கு பெருங்குளம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் ஒரு குடம் தண்ணீர் ரூ.10 வரை கொடுத்து வாங்கி வருகிறோம். அதே நேரத்தில் அருகில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சீரான குடிநீர் வழங்கப்படுகிறது. ஆகையால் எங்கள் கிராமத்துக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

சாத்தான்குளம் ஒன்றிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் ஜான்ராஜா, முதலூர் பஞ்சாயத்து செயலாளர் அருணாசெல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாலமோன் ஆகியோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 1000 நோயாளிகள் வரை வந்து சிகிச்சை பெறுகின்றனர். தற்போது இந்த பகுதியில் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அவர்கள் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றால், போதிய டாக்டர்கள் இல்லை, மருத்துவ உபகரணங்கள் இல்லை என்று கூறுகிறார்கள். இதனால் நோயாளிகளை பாளையங்கோட்டை அல்லது தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதனால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

காயல்பட்டினம் நகர ஜமாத்துகள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், காயல்பட்டினம் நகரசபையில் புதிய சாலைகள் அமைக்கும் போது, பழைய சாலையை தோண்டாமலும், தரமாக சாலைகள் அமைக்கப்படாததாலும் சாலைகள் சில மாதங்களிலேயே சேதம் அடைந்து விடுகின்றன. அதே போன்று பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்கள் சறுக்குவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் பேவர் பிளாக் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடற்கரையை இணைக்கும் சாலையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, தரமற்ற பேவர் பிளாக் சாலை அமைப்பதை தடுத்து தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க.வினர் கொடுத்த மனுவில், தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. ஆனால் மினிபஸ்களுக்கு எந்தவித கட்டண உயர்வும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் தூத்துக்குடி நகர மற்றும் கிராமப்புறங்களில் இயங்கும் மினி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளார். அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி இருந்தது. குறுக்குச்சாலையை சேர்ந்த விவசாயி கந்தசாமி என்பவர் கொடுத்த மனுவில், நான் குறுக்குச்சாலை ஏ.குமாரபுரத்தில் வசித்து வருகிறேன். விவசாய கடன் மூலம் டிராக்டர் வாங்கி விவசாயம் செய்து வந்தேன். இந்த நிலையில் கடனுக்கான தவணை தவறியதால் தனியார் வங்கி, என்னுடைய டிராக்டரை பறிமுதல் செய்து விட்டது. இதனால் எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் டிராக்டரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com