

காட்டுமன்னார்கோவில்,
காவிரி டெல்டா கடைமடை பகுதியாக காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம், கீரப்பாளையம், புவனகிரி ஆகியவை உள்ளன. இந்த பகுதிகளுக்கு கல்லணையில் இருந்து ஒரு பகுதியாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர், கீழணையில் தேக்கப்பட்டு வடவாறு, வடக்கு மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்கள் ஆகியவற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதற்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கி, கீழணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி மேட்டூர் அணையில் இருந்து கடந்த 2-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. கல்லணையில் இருந்து கடந்த 5-ந் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், 16-ந் தேதி கீழணையை வந்தடைந்தது. இங்கிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் வடவாறு வாய்க்காலில் வினாடிக்கு 1100 கனஅடி வீதமும், வடக்கு ராஜன் வாய்க்காலில் வினாடிக்கு 300 கனஅடி வீதமும், தெற்கு ராஜன் வாய்க்காலில் வினாடிக்கு 400 கனஅடி வீதம் மொத்தம் வினாடிக்கு 1800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 47 ஆயிரத்து 997 ஏக்கர் விளை நிலங்களும், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 39 ஆயிரத்து 50 ஏக்கர் விளைநிலங்களும் பயன் பெறும். டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக காவிரியில் வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மழை தற்போது குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. எனவே பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு வருகிறது.
மழை அதிகமாக பெய்யும்போது தண்ணீர் தேக்கப்பட்டு, அதிகளவு தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்படும். பாசன தேவைக்கு ஏற்ப அணைகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு மாற்றி அமைக்கப்படும். எனவே விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர்கள் பிரசாந்த் மு.வடநேரே(கடலூர்), சுரேஷ்குமார்(நாகப்பட்டினம்), லட்சுமிபிரியா(அரியலூர்), கோட்டாட்சியர்கள் ஜெயங்கொண்டம் டீனாகுமாரி, சிதம்பரம் ராஜேந்திரன், பொதுப்பணித்துறை சிதம்பரம் செயற்பொறியாளர் அன்பரசு, உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர்கள் வெற்றிவேல், ரமேஷ், முத்துகுமார், பார்த்திபன், தாசில்தார் ஜெயந்தி, விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் எம்.சி.சம்பத் தங்களை மதிப்பதில்லை எனவும், தங்களது தொகுதிக்கு அரசு நலத்திட்டங்கள் வரவிடாமல் தடுக்கிறார் எனவும், அவரை அமைச்சர் மற்றும் கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறி வருகின்றனர். மேலும் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சிகளையும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்து வருகின்றனர். கீழணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சியையும் எம்.பி.க்கள் கடலூர் அருண்மொழிதேவன், சிதம்பரம் சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் காட்டுமன்னார்கோவில் முருகுமாறன், சிதம்பரம் பாண்டியன், பண்ருட்டி சத்யாபன்னீர்செல்வம் ஆகியோர் புறக்கணித்தனர்.