டிப்பர் லாரி மோதி உடல் நசுங்கி பெண் சாவு

பாகூர் அருகே பேரன் கண் முன்பே, டிப்பர் லாரி மோதி உடல் நசுங்கி பெண் உயிரிழந்தார்.
டிப்பர் லாரி மோதி உடல் நசுங்கி பெண் சாவு
Published on

பாகூர்

பாகூர் அருகே பேரன் கண் முன்பே, டிப்பர் லாரி மோதி உடல் நசுங்கி பெண் உயிரிழந்தார்.

டயாலிசிஸ்

விழுப்புரம் மாவட்டம் கீழ்பாதி அடுத்த சொர்ணாவூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் திருமலை. இவர் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை சர்வேயராக பணியாற்றி வருகிறார். இவரது தாயார் உமா (வயது 61). இவருக்கு சிறுநீரக கோளாறு இருந்து வந்ததால், வாரத்தில் 3 நாட்கள் கிருமாம்பாக்கம் அடுத்த தனியார் மருத்துவமனைக்கு சென்று டயாலிசிஸ் சிகிச்சை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலையில் டயாலிசிஸ் செய்வதற்காக உமாவை அவரது பேரனான கல்லூரி மாணவர் சிவானந்தம் (20), மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு சிகிச்சை பெற்று திரும்பி வந்து கொண்டிருந்தார்.

டிப்பர் லாரி மோதி பலி

பிள்ளையார்குப்பத்தில் இருந்து பாகூர் வழியாக சென்று புறவழிச் சாலையை கடக்கும் போது, அவ்வழியே மண் ஏற்றி வந்த வேகமாக வந்த டிப்பர் லாரி மோதியது. இந்த விபத்தில் உமா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவானந்தம் பலத்த காயமடைந்தார். மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியது.

விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரியை, அதன் டிரைவர் நிறுத்தாமல் சென்று விட்டார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று லாரி டிரைவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து மீட்டு போக்குவரத்து போலீசில் ஒப்படைத்தனர்.

விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com