உத்தரபிரதேசத்தில் நள்ளிரவில் ரெயில் விபத்து தவிர்ப்பு தண்டவாள விரிசலை கண்டுபிடித்து டிரைவர் நிறுத்தினார்


உத்தரபிரதேசத்தில் நள்ளிரவில் ரெயில் விபத்து தவிர்ப்பு தண்டவாள விரிசலை கண்டுபிடித்து டிரைவர் நிறுத்தினார்
x
தினத்தந்தி 20 Aug 2017 10:30 PM GMT (Updated: 20 Aug 2017 10:10 PM GMT)

பூரி நகரில் இருந்து ஹரித்துவாருக்கு சென்ற உத்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் மாலை உத்தரபிரதேசத்தில் தடம்புரண்டது

லக்னோ,

பூரி நகரில் இருந்து ஹரித்துவாருக்கு சென்ற உத்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் மாலை உத்தரபிரதேசத்தில் தடம்புரண்டது. இந்த விபத்து குறித்து ரெயில்வே இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் பிரதாப்கார்–போபால் எக்ஸ்பிரஸ் உத்தரபிரதேச மாநிலம் மலாசா–புக்ரயா ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது.

அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்ட ரெயில் டிரைவர் திடீர் ‘பிரேக்’ போட்டு ரெயிலை நிறுத்தினார். டிரைவரின் சமயோசிதத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் பத்ரா சிக்கந்தர்பூர் அருகே பாபுதாம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஆள் இல்லாத கேட்டை கடக்க முயன்ற ஒரு லாரி மீது ரெயில் மோதியது. இதில் லாரியின் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ரெயில் என்ஜின் பலத்த சேதம் அடைந்தது.

ரெயில் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிலரும் இதில் காயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்துக்கு ரெயில்வே உயர் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story