மும்பை,
சாந்தாகுருஸ்சில் 1 வயது குழந்தையை கடத்திய 2 பெண்களை போலீசார் சோலாப்பூரில் வைத்து கைது செய்தனர். குழந்தையை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
குழந்தை கடத்தல்
மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் நடைபாதையில் வசித்து வரும் பெண் தனது 1 வயது குழந்தையுடன் தங்கி இருந்தார். கடந்த மாதம் 30-ந்தேதி அந்த குழந்தை காணாமல் போனது. இதனால் குழந்தையின் தாய் பல இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கும் கிடைக்காமல் போனதால் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
இதில் பர்தா அணிந்திருந்த 2 பெண்கள் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. இந்த பெண்களை தொடர்ச்சியாக கண்காணித்த போது சோலாப்பூருக்கு சென்றதாக தகவல் கிடைத்தது.
2 பெண்கள் கைது
இதையடுத்து அங்குள்ள போலீசார் 2 பெண்களையும் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த குழந்தையை மீட்டு மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் முன்னிலையில் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து 2 பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மும்பை குர்லா நேருநகரை சேர்ந்தவர்கள் எனவும், கடத்தப்பட்ட 1 வயது குழந்தையை தெலுங்கானாவிற்கு விற்க முயன்றதும் தெரியவந்தது.