சென்னை,
கடந்த 13 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்ற நிலையில், 12 ஆம் தேதியன்று நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக தமிழகத்தில் 3 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, பல்வேறு அரசியல் தலைவர்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டனர்.
அந்த வகையில் நடிகர் சூர்யா இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்று காலத்தில் நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்களை அச்சமில்லாமல் சென்று தேர்வு எழுத கட்டளையிடுவது வேதனையளிக்கிறது என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து, உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதி இருந்தார். அதேசமயம், சூர்யா மீது அவமதிப்பு வழக்கு தொடர வேண்டியதில்லை. அவரை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடலாம் என வலியுறுத்தி ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆறு பேரும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர்.
இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டு மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து நிறைவேற்றினார். அதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் தமிழக அரசின் இந்த செயலை வரவேற்று ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.
அதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.