மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் கூட்டணியில் மலையாளத்தில் பல வெற்றி படங்கள் வந்துள்ளன. மோகன்லால் மகன் பிரணவ் சமீபத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதுபோல் பிரியதர்ஷன் மகள் கல்யாணி தெலுங்கில் நட்சத்திர தம்பதியான அமலாநாகார்ஜுனாவின் மகன் அகில் கதாநாயகனாக நடித்த ஹலோ படத்தில் நாயகியாக அறிமுகமானார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்தார். மாநாடு படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கினால் தடைபட்டு உள்ளது. துல்கர் சல்மானுடன் வான் படத்திலும் நடிக்கிறார். தற்போது மலையாளத்தில் ஹிர்தயம் படத்தில் மோகன்லால் மகன் பிரணவ் ஜோடியாக நடிக்க கல்யாணி ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
சமீபத்தில் பிரணவ்வும், கல்யாணியும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்பி வைரலானது. இதைவைத்து இருவரும் காதலிப்பதாக மலையாள பட உலகில் கிசுகிசுக்கள் பரவின.
இதனை மோகன்லால் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, பிரணவும், கல்யாணியும் நெருங்கிய நண்பர்கள். நானும், பிரியதர்ஷனும் எப்படியோ அப்படித்தான் அவர்களும். நெருங்கி இருக்கிற மாதிரி ஒரு செல்பி எடுத்தாலே காதல் என்று கற்பனை செய்து கொள்வீர்களா? இது அர்த்தம் இல்லாதது என்று கூறியுள்ளார்.