சினிமா செய்திகள்

வதந்திகளை நம்ப வேண்டாம் - விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்து இயக்குனர் சுசீந்திரன்

விஜய் ஆண்டனியின் உடல்நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இந்த படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு கோடையில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் 'பிச்சைக்காரன் -2' படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது. மலேசியா, லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது உடல்நிலை தேறி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனாலும் வாய்ப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதனால் சென்னையில் பிரபல ஆஸ்பத்திரியில் விஜய் ஆண்டனி அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் உடல்நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"பிச்சைக்காரன்-2 படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி 2 நாட்களுக்கு முன்னாடியே சென்னையில் அவரு வீட்டுக்கு வந்துட்டாரு... 2 வாரம் டாக்டர் ஓய்வு எடுக்க சொல்லிருக்காங்க, கூடிய சீக்கிரம் வீடியோ மூலமா பேசுவாரு, ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம், விஜய் ஆண்டனி பற்றின தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்னு கேட்டுகிறேன்..."

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு