சினிமா விமர்சனம்

'மை டியர் டாலி' - சினிமா விமர்சனம்

இயக்குனர் ஏ.அரவிந்த்ராஜ் இயக்கத்தில் வெளியான 'மை டியர் டாலி' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

தனியார் அலுவலகத்தில் பணியாற்றும் வி.ஜே.பப்பு, சக ஊழியரான அனுபமாவை ஒரு தலையாக காதலிக்கிறார். ஆனால் அனுபமா அதே அலுவலகத்தில் பணியாற்றும் இன்னொரு நபரை காதலிக்கிறார்.

இதையறிந்து அதிர்ந்து போகும் பப்பு, வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விடுகிறார். ஆண்டுகள் கடந்து போக பப்புவுக்கு வீட்டில் பெண் பார்க்கும் படலத்தை முன்னெடுக்கிறார்கள். அப்போது அவர் காதலித்த அனுபமாவையே மணப்பெண்ணாக பெற்றோர் காட்டுகிறார்கள்.

இதனால் மகிழ்ச்சியில் உறையும் பப்பு திருமணத்துக்கு ஓகே சொல்கிறார். அனுபமாவை பெண் பார்க்கவும் செல்கிறார். அந்த நிகழ்வு பப்புவின் வாழ்க்கையில் பல எதிர்பார்க்காத மாற்றங்களை உண்டாக்குகிறது. பப்புவின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அதில் இருந்து பப்பு மீண்டாரா? பப்புவின் காதல் என்ன ஆனது? என்பதே மீதி கதை.

இதுவரை காமெடியில் கலக்கிய பப்பு, கொஞ்சம் நடிக்கவும் செய்துள்ளார். காதல் வலிகளை சொல்லும் காட்சிகளில் அனுதாபம் அள்ளுகிறார். எமோஷனல் காட்சிகளிலும் வெளுத்து வாங்கி, 'நம்ம பப்புவா இது...' என்று யோசிக்க வைத்துள்ளார். எதார்த்தமான நடிப்பால் அனுபமா கவர்கிறார். குறையில்லாத நடிப்பால் வசீகரிக்கிறார்.

ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா, ஆஷா, ராஜாமணி, பேபி தீக்‌ஷிதா, டொமினிக் உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பால் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். பாலாஜி கே.சேகரின் ஒளிப்பதிவும், எம்.பாசிலின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன. பாடல்களும் கேட்கும் ரகம்.

வித்தியாசமான காதல் காட்சிகள் பலம். லாஜிக் மீறல் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். காதல் பிரிவு தரும் வலியை ரசிகர்களின் இதயங்களில் கடத்தி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஏ.அரவிந்த்ராஜ். கிளைமேக்ஸ் ஈர்க்கிறது.

Also read:ஹிப்ஹாப் ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மீசையமுறுக்கு-2’ படத்தின் அறிவிப்பு!