டாக்டர் சங்கீதா மகேஷ், உளவியல் நிபுணர். உளவியல் தொடர்பான முதுகலை படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர். பல மாநாடுகளில் கலந்துகொண்டு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். அனைத்து தரப்பினருக்கும் மனநலம் தொடர் பான ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
* அனைவருமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில், நான் வேலைக்கு சென்று சம்பாதிப்பதன் மூலம் எனது குடும்பத்துக்கு உதவ விரும்புகிறேன். ஆனால் எனது கணவர் வேண்டாம் என்கிறார். இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்யலாம்?
தற்போதைய காலத்தில் கணவன்-மனைவி இருவருமே சம்பாதிப்பது, பொருளாதார ரீதியில் நிறைவாக வாழ்வதற்கு உதவும். முதலில் உங்கள் கணவர் உங்களை வேலைக்குச் செல்ல வேண்டாம் என கூறுவதற்கான காரணம் என்னவென்று கண்டறியுங்கள். ஒருவேளை நீங்கள் வேலைக்கு செல்வதால் வீட்டை கவனிப்பதற்கு முடியாமல் போய்விடும் என்று நினைக்கிறாரா? வீட்டு வேலைகள் செய்வதில் அவரது உதவியை நீங்கள் எதிர்பார்க்கக்கூடும் என்று யோசிக்கிறாரா? அல்லது உங்கள் வருமானம் பொருளாதார ரீதியாக போதாது என தயங்குகிறாரா? என அறிந்துகொள்ளுங்கள். பின்பு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற உங்கள் முடிவு, எந்தவிதத்திலும் அவரை பாதிக்காது என்று அவருக்கு உறுதி அளியுங்கள். அவருக்கு பொறுமையாக புரிய வையுங்கள். இதன் மூலம் அவருடைய முடிவு மாறும்.
மேலும், தற்போது பெண்கள் வேலைக்காக வெளியே செல்லாமல் வீட்டில் இருந்து சம்பாதிக்கும் வகையில் பல வாய்ப்புகள் உள்ளன. அவற்றையும் கருத்தில்கொண்டு யோசியுங்கள். நல்ல தீர்வு கிடைக்கும்.
* சில சமயங்களில் எனக்கும், என் கணவருக்கும் நடக்கும் வாக்குவாதங்களின்போது, அவர் என்னை அடிப்பதற்காக கையை ஓங்குகிறார். இது என்னை மிகவும் இழிவுபடுத்துவதாக தோன்றுகிறது. இதுபோன்ற தருணங்களில் நான் என்ன செய்ய வேண்டும்?
ஒரு உறவில் உடல் ரீதியான தாக்குதல் கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும். உங்கள் கணவர் கையை உயர்த்தும்போது, நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று அவரிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். நீங்கள் இதைப் பேசும்போது அவரைப் பற்றி எந்த விதத்திலும் விமர்சிக்காமல், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மட்டும் கூறுங்கள்.
மேலும் அவரை கையை உயர்த்தத் தூண்டுவது எது? என்று அவரிடம் கேளுங்கள். உங்கள் குரல், உடல் மொழி, நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் என அவரை கோபப் படுத்துவது எது? என்பதை புரிந்துகொண்டு அதை மாற்றிக்கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். கணவன்-மனைவி இடையே ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறலாம். அவற்றை வாக்குவாதங்களாக மாற்றாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இருவருக்குமே உள்ளது.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். தங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி,
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி,
சென்னை - 600007. மின்னஞ்சல்: devathai@dt.co.in