கோலார் தங்கவயல்:
விவசாயி
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியில் திப்பு நகரை சேர்ந்தவர் அஜ்மத் உல்லா (வயது 37). விவசாயியான இவர், ஆன்லைனில் கடன் செயலி மூலம் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனுக்கான வட்டியை அவர் கட்டி வந்துள்ளார்.
இதற்கிடையே அஜ்மத் உல்லாவை செல்போனில் தொடர்பு கொண்ட நபர்கள், தாங்கள் ஆன்லைன் கடன் செயலி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள், அஜ்மத் உல்லாவிடம் வட்டி அதிகமாக உள்ளது என்றும், அதனால் அசல் தொகையுடன் வட்டியை சேர்த்து கட்டும்படி தெரிவித்துள்ளனர். இல்லயென்றால் உங்களது புகைப்படத்துடன் வேறு பெண்களை இணைத்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புவதாக மிரட்டியுள்ளனர்.
ரூ.15 லட்சம் மோசடி
இதனால் அதிர்ச்சி அடைந்த அஜ்மத் உல்லா ரூ.15.56 லட்சத்தை பணபரிமாற்ற செயலிகள் மூலம் அவர்கள் கூறிய வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவர்கள் மேலும் பணத்தை கட்டும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர். அப்போது தான் அவருக்கு, மர்மநபர்கள் நூதனமுறையில் பேசி பண மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அஜ்மத் உல்லா, கோலார் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.