செய்திகள்

சேலத்தில் இருசக்கர வாகனப்பதிவு எண்களில் இயங்கிய 2 ஆட்டோக்கள் பறிமுதல்

சேலத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் இருசக்கர வாகனப்பதிவு எண்களில் இயங்கிய 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம்,

சேலம் மாநகர் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநகர போலீஸ் துணை கமிஷனர் செந்தில் மேற்பார்வையில் போக்குவரத்து உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி மற்றும் போக்குவரத்து போலீசார் அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அழகாபுரம் பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 2 ஆட்டோக்களை நிறுத்தி விசாரித்தனர். அதில், அந்த ஆட்டோக்களில் இருந்த பதிவு எண்கள், இருசக்கர வாகனத்திற்கு உரியது என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோக்களை ஓட்டி வந்த டிரைவர்கள் நைசாக அங்கிருந்து தப்பிஓட்டம் பிடித்தனர். பின்னர் 2 ஆட்டோக்களையும் போலீசார் பறிமுதல் செய்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனால் அந்த ஆட்டோக்கள் திருடப்பட்டதா? அது யாருடையது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் இதுபோன்ற வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் போலீசார் தெரிவித்தனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை