அம்பை,
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.21 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும். தனியார் மற்றும் அமைப்புசாரா தொழிலில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.
இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கத்தினர் நேற்று காலையில் அம்பை பூக்கடை பஜாரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் மைக்கேல் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ராமகிருஷ்ணன், முருகன், வடிவேல், பரத்வாஜ், சி.ஐ.டி.யு. சார்பில் ரவீந்திரன், வண்ணமுத்து, சுடலையாண்டி, இசக்கிராஜ், ஐ.என்.டி.யு. சார்பில் பாலு, ஆதிமூலம், பெருமாள், கருப்பசாமி, பீடித்தொழிலாளர் சங்கம் சார்பில் ரெபாக்காள், பஞ்சாலை சங்க தொ.மு.ச. செயலாளர் பரணிசேகர், தொ.மு.ச. நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மதிவாணன், அம்பை, நகர தி.மு.க. செயலளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், ராதா மற்றும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் வள்ளியூரில் சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி பீர்முகைதீன், இந்திய கம்யூனிஸ்டு ராதாபுரம் தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட நிர்வாகி சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 164 பேரை வள்ளியூர் போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.