செய்திகள்

பா.ஜனதா பிரமுகர் வீட்டில் 385 பவுன் நகை கொள்ளை - ஜவுளி எடுக்க சென்னை வந்தபோது கைவரிசை

மீஞ்சூர் அருகே பா.ஜனதா நிர்வாகி வீட்டின் பூட்டை உடைத்து 385 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செங்குன்றம்,

மீஞ்சூர் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் வசித்து வருபவர் ஜானகிராமன். இவர் பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், ஜானகிராமனின் தம்பி மகள் திருமணம் வருகிற 20-ந் தேதி சென்னை ஓ.எம்.ஆர்.சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக அமெரிக்காவில் உள்ள ஜானகிராமனின் மகனும், மருமகளும் வந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஜானகிராமன் வீட்டைப்பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் ஜவுளி எடுப்பதற்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து, ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னையில் உள்ள அவரது தம்பியின் வீட்டில் அன்று இரவு தங்கினர். அதன்பின்னர், அவர் நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பி வந்தார்.

அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் பதறி அடித்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த 5 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 385 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

உடனே அவர் மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் பொன்னேரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மற்றும் மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

அதில், ஜானகிராமன் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ள நிலையில், சம்பவத்தன்று தொழிலாளர்கள் அனைவரும் அருகில் உள்ள தங்களது வீட்டிற்கு சென்று விட்டதால் ஆளில்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது.

ஜானகி ராமனின் வீட்டில் அதிக அளவு நகை இருப்பதை அறிந்து திட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளதால், அவர்களது வீட்டுக்கு அறிமுகமான நபர்கள் யாரேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும், கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், கொள்ளையர்களை கண்டு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை