செய்திகள்

காவிரி- பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க ரூ.11,250 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம்

காவிரி- பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க ரூ.11,250 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பவானியில், மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி கூறினார்.

தினத்தந்தி

பவானி,

பவானி காலிங்கராயன் அணைக்கட்டு அருகே பவானி ஆற்றின் குறுக்கே அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் முதன்மை நீரேற்று நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சிகளில் உள்ள குளங்கள், 970 குட்டைகள் என மொத்தம் 1,044 நீர்நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு சென்று நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக பவானி காலிங்கராயன் தடுப்பணை பின்புறம் உள்ள பவானி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து வினாடிக்கு 250 கன அடி வீதம் 70 நாட்களுக்கு மொத்தம் 1.5 டி.எம்.சி. தண்ணீர் உறிஞ்சப்பட்டு குழாய்கள் மூலம் விஜயமங்கலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் 33 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும், அதை நீரேற்று நிலையத்துக்கு பயன்படுத்தும் திட்டமும் உள்ளது.

அதுமட்டுமின்றி நல்லாகவுண்டம்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய பகுதிகளிலும் நீரேற்று நிலையங்கள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக சிறப்பு குழாய்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதில் முதல் கட்ட பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிவடைந்து 61 குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி, பவானி, சரபங்கா, திருமணிமுத்தாறு, நொய்யல் ஆகிய ஆறுகளில் கழிவுகள் கலப்பதை தடுக்க நடந்தாய் வாழி காவிரி என்னும் புதிய திட்டம் ரூ.11,250 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

ஆய்வின்போது அத்திக்கடவு- அவினாசி திட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம், பெருந்துறை கோட்ட செயற்பொறியாளர் மன்மதன், செயற்பொறியாளர் அன்பழகன், பவானி காலிங்கராயன் அணை செயற்பொறியாளர் குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்