திருவெண்காடு,
நாகை மாவட்டம், திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமம் உள்ளது. சைவ, வைணவ கோவில்களை அதிகம் கொண்டுள்ள இவ்வூரை சுற்றி 11 திவ்யதேச பெருமாள் கோவில்களும், 12 பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களும் உள்ளன. முன்னொரு காலத்தில் நாங்கூரில் உள்ள மதங்காஸ்ரமத்தில் (மதங்கீசுவரர்கோவில்) மதங்கரிஷி தவம் செய்தபோது பார்வதி தேவி பெண்ணாக அவதரித்து பின் சிவபெருமானை திருமணம் செய்து கொண்டு மதங்கரிஷிக்கும், நந்தி தேவருக்கும் திருமண கோலத்தில் காட்சி தந்தார் என்று புராண வரலாறு கூறுகிறது. இந்த நிகழ்வு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கூரில் உள்ள மதங்கீஸ்வரர் கோவிலில் மதங்கீசுவரர் உள்பட 12 சிவபெருமான்கள் தேவியர்களுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கல்யாண கோலத்தில் வீதிஉலா செல்லும் விழா நடைபெற்றதாகவும், காலப்போக்கில் இந்த விழா நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று இந்துசமய அறநிலையத்துறை மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் நாகராஜசிவம் ஆகியோர் முயற்சியால் மேற்கண்ட விழா கடந்த ஆண்டு நடைபெற்றது.
திருக்கல்யாணம்
இந்த விழா 2-வது ஆண்டாக நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி நாங்கூர் மதங்கீசுவரர், திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுவரர், திருயோகீசுவரம் யோகநாதர், திருசொர்ணபுரம் சொர்ணபுரீசுவரர், நாங்கூர் அமிர்தபுரீசுவரர், செம்பதனிருப்பு நாகநாதர், நாங்கூர் நம்புவார்கன்பர், கைலாசநாதர், திருமேனிக் கூடம் சுந்தரேசுவரர், பெருந்தோட்டம் ஐராவதேசுவரர், அன்னப்பன்பேட்டை கலக்காமேசுவரர், நயினிபுரம் நயனவரதேசுவரர் ஆகிய 12 கோவில்களில் உள்ள சிவபெருமான்கள் தேவியர்களுடன் வீதிஉலாவாக சென்று நாங்கூர் கீழவீதியில் உள்ள மதங்கீசுவரர் கோவிலில் எழுந்தருளினர்.
தொடர்ந்து சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் ரிஷப வாகனங்களில் எழுந்தருள செய்து, வேதமந்திரங்கள் முழங்க ஒரே நேரத்தில் 12 சிவபெருமான்- அம்பிகைகளுக்கு திருக் கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு மதங்கரிஷிக்கும், நந்தி தேவருக்கும் திருமண கோலத்தில் காட்சி அளித்தனர். இதையடுத்து மேள-தாளம் இன்னிசை கச்சேரியுடன் 12 சிவபெருமான்கள், அம்பிகை யுடன் வீதிவலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி, பாரதி எம்.எல்.ஏ., விழா ஒருங்கிணைப்பாளர் நாகராஜசிவம், கோவில் நிர்வாக அதிகாரி முருகையன், மாநில அர்ச்சகர் சங்க தலைவர் அருணாசலம், பொது செயலாளர் பாலசடாச்சரம், 18 சித்தர் ஒளிலாய பீட நிறுவனர் நாடிராஜேந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதங்கீசுவரர் கோவிலில் நேற்று 12 சிவபெருமான்களுக்கும் அபிஷேகம் செய்து ஆராதனை நடைபெற்றன. பின்னர் சாமிகள் அந்தந்த கோவிலுக்கு பக்தர்களால் எடுத்து செல்லப்பட்டனர்.